ரவியை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மனு தாக்கல்

தன்னை கைது செய்யுமாறு தெரிவித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 06 திகதி பிடியாணை பிறப்பித்தது.

குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணானது ரவி கருணாநாயக்க தனது ரீட் மனுவில் தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன் தன்னை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிவுறுத்தலையும் இரத்து செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கை கொழும்பு கோட்டை நீதவானிடம் இருந்து நீக்குவதற்காக உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த ரீட் மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

(பின்னிணைப்பு 12.35 a.m)

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.