ரத்னஜீவனின் சர்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உரியநேரத்தில் அவை வெளியில் வரலாம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா அமைந்துள்ள அரச வாடிவீட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இன்று, நேற்று அல்ல நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பக்கச்சார்பான குழப்பத்தை ஏற்படுத்தகூடிய கருத்துக்கைள தான் தெரிவித்திருக்கின்றார். அது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல.

அவருடைய வரலாற்று ரீதியான சர்ச்சைகள் தொடர்பாக என்னிடம் ஆவணங்கள் இருக்கின்றன. உரியநேரத்தில் அவை வெளியில் வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வவுனியா பொருளாதார மத்தியநிலையத்தினை திறக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் எனக்கு தெரிவித்துள்ளனர்.

அதனை ஆரம்பிப்பதற்கான சாதகமான விடயங்களை விரைவில் ஏற்படுத்துவேன். கடந்த ஆட்சியில் முன்னெடுக்கபட்ட அபிவிருத்தி திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதில் பலவற்றை அரசியல்வாதிகள் சுருட்டிக்கொண்டுள்ளார்கள். அதனை ஆராய்வதற்கு ஒரு குழுவினை நியமிக்குமாறு அமைச்சரவையில் கேட்டிருந்தேன்.

எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிற்கு பின்னர் அந்ததிட்டங்கள் தொடர்பாகவும் முறைக்கேடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கபடும்.

பாராளுமன்ற தேர்தலில் எமக்கு 5 ஆசனங்களிற்கான வாக்குகளை மக்கள் வழங்கினால் அரசியல் உரிமைக்கான தீர்வு, அபிவிருத்தி அன்றாட பிரச்சினைகளிற்கான தீர்வுகளை சுடக்குமேல் சுடக்கு போட்டு 5 வருடத்திற்குள் தீர்போம் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

தற்போது எங்களுக்கு போதியளவு மக்கள் பலமோ மக்கள் ஆணையோ கிடையாது. விரலுக்குத்தக்க வீக்கம்போல தான் நாங்கள் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்துள்ளோம்.

வரும் காலத்தில் எங்களுக்கு மக்கள் அதிகூடிய வாக்குகளையும் அதிகூடிய ஆசனங்களையும் வழங்கும் பட்சத்தில் மக்கள் அடையாளப்படுத்தும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு சுண்டிச் சுண்டி தீர்வுகளை காண்போம்.

அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுகின்றவர்களின் விடுதலை அல்லது காணாமல்போன உறவுகளுக்கு பரிகாரம் காணுவதற்கு அல்லது அவற்றை அறிவதற்கும் இவ்வாறு மக்களின் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து தேர்தலில் வாக்குகளை அபகரிப்பதற்காக முன்வைத்த எவ்வளவோ கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை.

தற்போது அரசியல் கைதிகளின் பட்டியல் ஒன்றினை வழங்குமாறு பிரதமர் கேட்டிருந்தார். கொடுத்திருக்கின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்தளவு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு ஐந்தாறு ஆசனங்கள் அதற்குரிய வாக்குகளை மக்கள் வழங்குவார்களாக இருந்தால் மக்களுடைய பிரச்சினைகளான அரசியல் உரிமைக்கான தீர்வு, அபிவிருத்திக்கான தீர்வு, அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு வரும் காலங்களில் ஐந்து வருடங்களுக்குள் தீர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.