ரணில் கட்சியை காப்பாற்றுவதில் மும்மூரமாக இருந்தார் – மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை!

பிரபா கணேசனுக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கினை சகித்துக் கொள்ள முடியமால் அனைத்து கட்சியினரும் எனக்கு எதிராக தேவையில்லா பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் இருந்து வந்தவன் என்ற குற்றச்சாட்டினை வைக்கின்றார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் வன்னியில் இருக்கின்றேன், வன்னியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்கிட்டுபார்த்தால் அவர்கள் கொழும்பில் தான் அதிகம் இருந்துள்ளார்கள்.

வன்னி மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டு அவர்கள் ஊடாக பாராளுமன்றத்தில் பாரியளவில் மோசடிகளை செய்து சொத்துக்களை கொழும்பில் வாங்கி வைத்துள்ளார்கள். வன்னி மக்கள் சுவர்கடிகார சின்னத்திற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள்.

இன்று என்னைப் பார்த்து பிரதேச வாதம் பேசுகின்றார்கள், ஆயுதப் போரட்டத்தின் போது நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை பார்த்தால் தெரியும்.

நான் ஒரு தமிழன் என்ற முறையில் தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளேன் என்று சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று இந்த அரசு 13 ஆவது 19 ஆவது திருத்த சட்டத்தையும் ஒழித்துவிடுவார்கள். எங்களுக்கு மீண்டும் ஆணையினை தாருங்கள் என்று கூட்டமைப்பு கேட்கின்றார்கள்.

13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு போதும் ஒழிக்கப்படமாட்டாது என்று பிரதமர் தெளிவாக சொல்லியுள்ளார்.

கடந்த நல்லாட்சி காலத்தில் பல விடையங்களை மக்களுக்கு செய்யக் கூடியதாக இருந்தும் கூட எதனையும் செய்யாமல் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியினை காப்பாற்றுவதில் மட்டும் தான் மும்மூரமாக இருந்தார்கள் மக்களுக்கு வேறு எதனையும் செய்யவில்லை என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.