’ரணிலே அடுத்த ஜனாதிபதி’

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பதவி வகிக்கப் போகின்றார். இந்தக் கள நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல், நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விலை போய் விட்டோம் என ஒரு சாரார் கொக்கரிப்பது, அரசியல் அறிவுச் சூனியமான பேச்சேயன்றி வேறில்லை’ என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அத்துடன், ‘எடுத்ததெற்கெல்லாம் மக்களிடம் வரி அறவிட்டு, தாங்க முடியாத வரிச்சுமையை மக்கள் மீது ஏற்படுத்தி, உள்ளுராட்சிமன்றங்கள் என்றாலே மக்களிடம் வெறுப்பேறுமளவுக்கு உள்ள நிலைமையை மாற்றி, முழுவதுமாக மக்களுக்குச் சேவை செய்வதை நடைமுறையில் காட்டவே, நாங்கள் உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றப் போகின்றோம்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏறாவூரில் இன்று (07), வட்டாரத் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஒருபோதும் அதன் தனித்துவத்தை இழக்கவில்லை. சமயோசிதமான சிந்தனை மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியல் வியூகங்களை வகுத்தே, அக்கட்சி செயற்பட்டு வந்திருக்கின்றது என்பது, அதன் கடந்தகால வரலாறுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.

‘நாங்கள் எங்கெங்கெல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்றோமோ அங்கெல்லாம், ஆட்சியைக் கைப்பற்றுவோம். இது உறுதியான விடயம். அரசியல் ரீதியான வியூகங்களில் நாம் ஒருபோதும் தோற்றுப் போனதில்லை.

‘உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற போது, நாட்டிலுள்ள 70 சதவீதமான உள்ளுராட்சிமன்றங்களின் அடுத்து வரும் ஆட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும். அந்த வியூகத்தின் அடிப்படையிலேயே, நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகின்றோம்.

‘கிழக்கு மாகாணத்திலே சிறந்த நவீன சந்தை, இலத்திரனியல் வாசிகசாலை, சுமார் 2500 பேர் அமர்ந்து நிகழ்வுகளைக் கண்டு களிக்கக்கூடிய கலாசாரக் கேட்போர் கூடம், நவீன வசதிகள் கொண்ட அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என்பன ஏறாவூரில் அமையும். இதனை விட, ஏறாவூர் நகரசபை என்ற அந்தஸ்தில் இருந்து, மாநகர சபை என்ற அந்தஸ்தைப் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

LEAVE A REPLY