ரணிலுடன் எழுத்து மூலம் எந்த உடன்படிக்கையினையும் த.தே. கூட்டமைப்பு செய்யவில்லை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்காக பிரதமர் ரணிலுடன் எழுத்து மூலம் எந்த உடன்படிக்கையினையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

சமகால அரசில் நிலமைகள் குறித்து இன்று(07-04-2018) நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறியிருப்பதாவது…..

அண்மைய நாட்களில் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய தாக்கம் ஏற்பட்டிருந்தது. ஆட்சி எவ்வாறு இருக்கப் போகின்றதென்பது தெளிவாகவில்லை. இந்நிலையில் தான் கூட்டமைப்பு தெளிவாகவொரு முடிவை எடுத்திருந்தது.

அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் இந்த அரசாங்கம் செயற்படுவதற்கு அரசிற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

அதனடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளினால் அது தற்பொது இடைநிறுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது.

ஆகவே அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க தேசிய அரசாங்கத்திற்கு இன்னும் 2 வருட காலம் இருக்கின்றது. இந் நிலையில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட காரணத்திற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் குழப்பும் வகையில் நாங்கள் செயற்படக் கூடாது.

மேலும் அத்தகைய புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் உள்ளிட்ட பல விடயங்களைக் குழப்புகின்ற வகையில் பொது எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது.

அதனடிப்படையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து பிரதமருக்கு ஆதரவளிப்பதான தீர்மானமொன்றை நாங்கள் எடுத்திருந்தோம்.

எங்களது முடிவு தான் இந்த விடயத்தில் பிரதானமாக இருந்தது. அதனடிப்படையில் தான் பலரும் செயற்பட்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக நாங்கள் உட்பட சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எங்களது நிலைப்பாட்டையே எடுத்திருந்தன. அதனால் இதனை இனவாத ரீதியாகச் சித்தரிக்க தெற்கில் பல கட்சிகள் முனைகின்றன.

இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேனை தொடர்பில் கூட்டமைப்பு ஐனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது.

அதில் பேசிய குறிப்பாக பத்து விடயங்கள் குறித்தும் ஏற்கனவே செய்திகளில் வந்திருக்கின்றன. இந்நிலையில் அந்த பத்து விடயங்கள் குறித்து பிரதமருடன் கூட்டமைப்பிற்கு உடன்பாடு அல்லது ஒப்பந்தங்கள் இருக்கின்றனவா என சர்வதேச ஊடகங்கள் எம்மிடம் கேட்டிருந்தன .அதே போன்று அமைச்சர் மனோகணேசனிடமும் கேட்டிருந்த போது அவ்வாறு ஏதும் இல்லை என்று மணோகணேசன் குறிப்பிட்டிருக்கின்றார்.

அவ்வாறான எந்தவித ஒப்பந்தங்களையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பேச்சுக்களின் போது நல்லாட்சி அரசாங்கள் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கின்ற பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளோம். மேலும் நாங்கள் முன்வைத்த விடயங்கள் என்ன என்பதை பொது வெளியில் அதாவது பாராளுமன்றத்திலே நாங்கள் தெரிவித்திருக்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY