ரணிலின் பிரதமர் பதவியை பறிக்க கரு – சஜித்துடன் நடத்திய இரகசிய பேச்சுக்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கு கடந்த சில மாதங்களாக அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன கடந்த மேற்கொண்டிருந்த அரசியல் சூழ்ச்சி தொடர்பில் இன்றைய தினம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு தலைவரை அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு மேற்கொண்டிருந்த இரகசிய பேச்சுக்கள் தொடர்பில் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இன்றைய தினம் பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மைத்ரிபால சிறிசேன, பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிறேமதாச ஆகியோருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர்கள் இருவரும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அஞ்சி நிராகரித்துவிட்டதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய உங்களுக்கு வேறு மாற்றுவழி இல்லையா என்று என்னிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் என்னிடம் கேள்வி எழுப்பினர்.இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நாம் அதற்கான மாற்று வழிக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தோம்.

குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகள் எமக்கு ஏற்புடையதல்ல. அதனால் கரு ஜயசூரியவை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். அவரிடம் காலில் விழாத குறையாக நான் இதனைக் கேட்டேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஆனால் நான் எனது முயற்சியை கைவிடவில்லை. அதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிறேமதாசவை அழைத்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.

இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக சஜித் பிறேமதாஸவை நாளாந்தம் அழைத்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்துக்கொள்வதாக உத்தரவாதமும் அளித்தேன்.

ஆனால் சஜித்தும் தனது தலைவருக்கு துரோகம் இழைக்கத் தயாரில்லை என்று கூறி ஒதுங்கிவிட்டார். அதனாலேயே ஒக்டோபர் 26 ஆம் திகதி கரு – சஜித் ஆகியோரால் மோதமுடியாத ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக மோதக்கூடிய மஹிந்த ராஜபக்சவை அழைத்து பிரதமராக நியமித்தேன்.

வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எம்மால் செயற்பட முடியாது. நாட்டு மக்களின் மனங்களை புரிந்துகொண்டு, நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத ஒருவரான ரணில் விக்கிரமசிங்கவை நீக்கினோம் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.