ரஞ்சன் வீட்டில் கைப்பற்றப்பட்ட இறுவெட்டுக்கள் எவ்வாறு ஊடகங்களிடையே பரப்பப்படுகின்றன? – ரணில் கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தில் இருந்து பொலிஸார் கைப்பற்றிய இறுவெட்டுக்களின் உள்ளடக்கங்கள் எவ்வாறு ஊடகங்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

இறுவெட்டுக்கள் பொலிஸ் காவலில் உள்ளன, ஆனால் குறுந்தகடுகளின் உள்ளடக்கங்கள் ஊடகங்களுக்கும் மற்றவர்களுக்கும் கசிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் இறுவெட்டுக்களின் நகல்களைப் பெற்று அவற்றை ஆராய்ந்து, எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து அந்த உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்ரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரியவை கேட்டுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் திட்டியதாக இன்று நாடாளுமன்றில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த சம்பவம் நாடாளுமன்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.