யுத்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமைக்கான பதிலையே அரசாங்கம் தற்போது அனுபவிக்கிறது – சாந்தி

யுத்த குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்காமைக்கான பதிலை அரசாங்கம் தற்போது அனுபவித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலைக்கு அரசே காரணமென தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்காததற்கு கிடைத்த பதிலையே அரசாங்கம் தற்போது அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தங்களுடைய அரசியல் இருப்புக்களைத் தக்கவைக்கவேண்டும் என்பதற்காக, குற்றவாளி என்று தெரிந்தும் குற்றவாளிக்கூண்டில் அவர்களை ஏற்றாது அரசு செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் எத்தனையோ அமைச்சர்கள், அரசியல்வாதிகள் இந்த பயங்கரவாதச் செயலுக்கு, சூழ்ச்சிக்காரராக இருந்திருப்பார்கள் என்ற சந்தேகங்கள் உள்ளபோதிலும் அதை ஆராயாது செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே விடயத்தை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் செய்திருந்தால் அவர்கள் எப்போதோ குற்றவாளிக்கூண்டில் இருந்திருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.