யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

வட கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு எங்களுடைய கல்வி அமைச்சு ஆகியன இணைந்து அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ், கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடல் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் வடகிழக்கு பகுதிகளில் பல பாடசாலைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்குள்ள மக்களுக்கு புனரமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சிற்கு இருக்கின்றது. இந்த செயற்பாட்டை நாங்கள் முன்னெடுக்கின்ற பொழுது எங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு முன்வந்துள்ளமை மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு விடயமாகும்.

இந்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதை காணமுடிகின்றது. அவர்களுடன் நாங்கள் இணைந்து செயற்படுவதால் இதனை விரைவாக முன்னெடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களுடைய அமைச்சின் மூலமாக பாடசாலை காணிகளை விடுவிப்பதிலும் வேறு சில ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றனர். நாங்கள் கல்வி அமைச்சின் மூலமாக இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். கடந்த காலங்களில் நான் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பு தரப்பினர் வசம் உள்ள பாடசாலைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தினேன்.

அவர்கள் மிகவும் சாதகமான பதிலை வழங்கினார்கள். அநேகமான பாடசாலைகளை கையளிக்க அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் சாதகமான செயற்பாடாக அமைந்துள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கு உட்பட 304 பாடசாலைகள் இணம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலைகளும், கிளிநொச்சியில் 72 பாடசாலைகளும், முல்லைத்தீவில் 48 பாடசாலைகளும், மன்னாரில் 31 பாடசாலைகளும், வுவனியாவில் 23 பாடசாலைகளும், திருகோணமலையில் 45 பாடசாலைகளும், மட்டக்களப்பில் 35 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY