யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மாணவர்களை பிணையில் விடுவிப்பது மட்டுமல்ல, அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதே தமது நோக்கமென்றும் பொலிஸார் இந்த வழக்கை உரியமுறையில் விசாரணை செய்தால் குறித்த மூவரையும் வழக்கிலிருந்தே விடுவிக்க முடியும் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் குறிப்பிட்டார்.

இருதரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதவான், மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தது.

யாழ். மாணவர்களின் விடுதலை – முக்கிய தீர்ப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டதாக படையினர் தெரிவித்திருந்தனர். அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பிணை வழங்கும்படி கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் பிணை கோரிக்கைக்கு அரசுத் தரப்பு ஆட்சேபனை தெரிவித்ததால், அதனை மீறி பிணை வழங்க முடியாதென பிணை மனுக்களை நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து சட்டமா அதிபரை நேரில் சந்தித்தும் கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறான நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களைப் பிணையில் விடுவிப்பதை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் ஆட்சேபிக்காது என சட்டமா அதிபர் அலுவலகம் நேற்று மாலை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக கூறப்படுகிறது.