யாழ். பல்கலை மற்றும் பிரித்தானியா பர்மிங்காம் பல்கலை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியா பர்மிங்காம் (Birmingham) பல்கலைக்கழகத்துக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்படவுள்ளது.

நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு என்ற கொள்கைக் கட்டமைப்புக்கு அமைவாக மனிதவள அபிவிருத்தி மூலம் அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கும் அபிவிருத்தி மூலோபாய வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் தேவைக்கு அமைய இந்த உடன்படிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மூலோபாயத்துக்கு உட்பட்ட வகையில் பிரித்தானியாவின் சுகாதார ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆற்றியல் பைபிறில்லேசன் (Atrial Fibrillation) முகாமைத்துவம் மற்றும் உலக சுகாதாரக் குழுவின் ஆய்வு தொடர்பாக குறித்த இரு பல்கலைக்கழங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பரீட்சார்த்திகளினதும், பட்டப்பின் படிப்பு பரீட்சார்த்திகளினதும் ஆய்வு ஆற்றலை மேம்படுத்துவதற்கான பின்புலத்தை வழங்கும்.

இதற்காக பிரித்தானியாவின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தினால் முழுமையான நிதியுதவி மற்றும் ஆலோசனைக்கான நிதியுதவி என்ற ரீதியில் 2 இலட்சத்து 9 ஆயிரம் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ஸை ஆய்வுக்கு நன்கொடையாக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக உத்தேச ஆய்வுத் திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்க அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.