யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதற்கமைய நாளை (வியாழக்கிழமை) அவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை புறக்கணிக்கவுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இதுவரை பட்டமளிப்பு நடத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு நாளை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.