யாழ்ப்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம் வாபஸ் தூதரக அதிகாரிகளின் சமரசத்தை ஏற்றனர்

jaffna-jail-1கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மீனவர்கள் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல், தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 56 தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் சிறைக்கு விரைந்து சென்றனர்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம், ‘‘விரைவாக உங்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தூதரக அதிகாரிகள் மீனவர்களிடம் உறுதி அளித்தனர். அதன்பேரில் 56 மீனவர்களும் போராட்டத்தை கைவிட்டதாக தெரிகிறது.

LEAVE A REPLY