யார் குற்றவாளி, யார் நிரபராதி – தீர்மானிக்கும் பொறுப்பு நீதிபதிகளை சார்ந்தது!

சட்டத்தின் மூலம் முறையாக நிரூபிக்கப்படும் வரையில் எவரையும் குற்றவாளி என கூற முடியாது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றங்களில் யார் குற்றவாளி, யார் அப்பாவி என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல் யாப்பு எந்தவொரு அரசியல்வாதிக்கோ, மதகுருவுக்கோ, சமூக ஊடகங்களுக்கோ வழங்கவில்லை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியும் அத்தகைய அரசியல் யாப்பை பாதுகாப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

த கார்டினல் ட்றூத் என்ற தலைப்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்தக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. எந்தவொரு குற்றம் தொடர்பிலும், யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு நீதிபதிகளை சார்ந்தது என்று அமைச்சர் கூறினார்.

முறையான பொலிஸ் விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம். இத்தகைய சட்டமுறையை இனவாதிகள் கடத்திச் சென்று தலைகீழாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாதென அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.