மோடிக்கும் மொட்டுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் சிங்கள வாக்காளர்கள்

பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியின் சின்னமாகவே தென்பகுதியில் தமது ஆதரவாளர்கள் பார்ப்பதால், அந்தச் சின்னத்தை ஏற்க முடியாதிருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஹெற்றிபொலவில் நடந்த கூட்டம் ஒன்றில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர, உரையாற்றிய போதே இதனைக் கூறியுள்ளார்.

“தெற்கிலுள்ள கட்சி ஆதவாளர்கள் எம்மிடம் கலந்துரையாடும் போது, ‘ மொட்டு சின்னத்தை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

அதனைப் பார்க்கும் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி தான் நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் 14 வீத வாக்குகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளாகும். எனினும் அதில் ஒருவர் கூட, நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்கவில்லை.

சாதாரண முஸ்லிம் மக்கள், மொட்டு சின்னத்தை மோடியின் சின்னமாகவும், அவர் இந்துவாதி என்பதாலும் இம் மக்கள் அதனை தவிர்க்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

அதிபர் தேர்தலில் எமக்கு அனைவரதும் வாக்குகளும் அவசியம். சிங்கள மக்களது வாக்குகளை மாத்திரம் பெற்று தேர்லில் வெற்றி பெற முடியாது.

தமிழ் மக்களானாலும், முஸ்லிம் மக்களானாலும் அனைவரும் ஒரு அதிபருக்கே வாக்களிப்பார்கள்.

எனவே அவ்வாறான தலைவர் அடிப்படைவாதியாக இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும்.

எனவே தான் பொது சின்னத்தை அறிமுகப்படுத்தி தேர்லில் போட்டியிடுவோம் என்பதை வலியுறுத்துகிறோம். ” என்று தெரிவித்துள்ளார்.