மொழியின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரிக்க வேண்டாம் – விஜித் விஜயமுனி

நாடாளுமன்றில் அங்கம் வகிப்பவர்களை தமிழ், முஸ்லிம், சிங்களர்வகள் என்று பாராமல், அனைவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பார்க்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்ற அவரிடம் கூட்டமைப்பு, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டமைப்புடன் உடன்படிக்கைக்கு சென்றதா இல்லையா என்பது குறித்து எமக்கு பிரச்சினை இல்லை. அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களையும் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் எனப் பிரித்துப் பார்க்க கூடாது. அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியான அரசாங்கத்தை அமைக்கவேண்டியது எமது பொறுப்பாகும். நாம் நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்து, நாட்டின் நிர்வாகத்தை பலப்படுத்தவேண்டும்.

கடந்த காலங்களில் பிரதமர் இல்லாமல், அரசாங்கம் இல்லாமல் நாடு திண்டாடியது. குடிசையில் உள்ள ஏழை முதல், மாளிகையில் வாழும் செல்வந்தர்கள் வரையிலும் பாதிக்கப்பட்டனர். அச்சத்தில் காணப்பட்டனர். அவர்களின் அச்சத்தைப் போக்குவதே எமது பொறுப்பாகும்“ என மேலும் தெரிவித்துள்ளார்.