மொட்டு கட்சியின் மாயாஜாலம் ஜனாதிபதி தேர்தலை செல்லுபடியற்றதாக்கிவிடும் – சம்பிக்க

பொதுஜன பெரமுனக் கட்சியினரின் மாயாஜாலம், அடுத்த ஜனாதிபதி தேர்தலையும் செல்லுபடியற்றதாக்கிவிடுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செய்த வேலைத்திட்டங்களை வெளியில் தெரியப்படுத்தாமையே பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த செயற்பாட்டை நாம் இனிமேல் மேற்கொள்ளவுள்ளோம். அத்தோடு, அடுத்ததாக தேர்தல்களுக்கும் நாம் முகம் கொடுக்கவுள்ளோம்.

எம்மைப்பொறுத்தவரை இந்த தேர்தலில் நிச்சயமாக சவால்கள் இல்லாமலேயே வெற்றிபெற முடியும். சிலர் இன்று பொதுஜன பெரமுனக் கட்சிக்கு அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

நிச்சயமாக இந்த முறைத் தேர்தலில் 65 இலட்சம் வாக்குகளை பெறுபவரே வெற்றிப்பெறுவார். நாம், சரியான நபரைக் களமிறக்கினால் நாம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெருவோம்.

இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஊடகங்கள் அன்றி, சமூக ஊடகங்கள் தான் இன்று சக்தி வாய்ந்தவையாக காணப்படுகின்றன.

இதனால்தான், ஒக்டோபர் சூழ்ச்சியையும் எம்மால் வெற்றிக்கொள்ள முடியுமாக இருந்தது. அதேபோல், ஜனாதிபதித்தேர்தலிலும் வெற்றிப்பெற்றால், நாம் உடனடியாகப் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வோம்” என தெரிவித்தார்.