மொக்கேனப்பட்டுப்போகும் செயலைச் செய்கிறீர்கள்!

வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதா? தாண்டிக் குளத்தில் அமைப்பதா என்ற வாதப்பிரதிவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் வாக்கெடுப்பு மூலம் இடத்தெரிவை செய்யலாம் என்று கூறிவிட, வாக்கெடுப்பு மூலம் இடத் தெரிவு நடத்துவது பொருத்தமற்றது. மாறாக அறிவியல் ரீதியாக சிந்தித்து செயற்படுவதே நல்லது.

அந்தவகையில் ஓமந்தையே பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்கான தக்க இடம் என்று தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கூட்டப்பட்டதுறை சார்ந்தவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அந்த முடிவு வெளிப்படுத்தப்பட்டது.

இந் நிலையிலும் வாக்கெடுப்பு என்பது அமுல் படுத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஓமந்தையே பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடம் என்று தெரிவாகியது.

வாக்கெடுப்பு நடத்துவது தவறென்றிருந்த நிலைமை தக்க இடத்தெரிவினால் தணிந்து கொண்டது. அந்தவகையில் கட்சித் தலைமை, பதவி ஆசை என் பவற்றுக்கு இடம் கொடாமல் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத்தமான தென்ற சரியான முடிவுக்கு வாக்களித்தவர்களின் மன உணர்வு பாராட்டுக்குரியது.

அதேநேரம் சிலர் வாக்களிக்காமல் அமைதி காத்தனர். ஒரு 5 பேர் மட்டும் தாண்டிக்குளத்தை தெரிவு செய்து வாக்களித்தனர். அதற்காக அவர்கள் மீது குறைகூற நாம் ஒருபோதும் தயாரில்லை.
ஜனநாயகம், வாக்கெடுப்பென்று வந்து விட்டால் எந்த பக்கம் வாக்களித்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே சான்றாண்மைப் பண்பு.

அதேநேரம் யார்? யார்? எந்தெந்த பக்கம் வாக்களித்தனர் என்பதை தமிழ் மக்கள் அறிந்து அவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதையும் எவரும் தடுக்க முடியாது என்பது ஏற்புடையது.

இப்போது வாக்கெடுப்பின் முடிவு துறைசார்ந்த நிபுணர்கள் எடுத்த முடிவோடு ஒத்திருப்பது மனத்திருப் தியை தந்தாலும் இவை தொடர்பில் நாம் புளுகு கொள்ள முடியும் என்று யாரேனும் நினைத்தால் அது மிகப்பெறும் அறியாமை என்று உரைப்பது சாலப் பொருத்துடையது.

ஏனெனில் மண் மீட்புப் போரில் எத்தனையோ இளைஞர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்த இந்த மண்ணில், தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எங்கள் இனத்தையே விற்றுப் பிழைக்கத் தலைப்பட்டனர் என்ற உண்மையை நினைக்கும் போது, நெஞ்சம் வெடிக்கும் போல் உள்ளது.

ஓமந்தைதான் என்று தெரிவு செய்வதற்குக் கூட எங்களால் முடியவில்லை. அதற்குள்ளும் ஒரு அரசி யலை நடத்தி வாக்கெடுப்பு என்று கூறி; மக்களின் மனநிலையை திசைதிருப்பி வாக்கெடுப்பில் வெற்றி என்று ஒரு குட்டிப்புளுகை ஏற்படுத்தி…

அப்பாடா இப்படி ஒரு துரோகத்தனத்தை ஏன் தான் இவர்கள் செய்கின்றனர் என்பது தெரியவில்லை.
செய்ய வேண்டிய எத்தனையோ கடமைகள் காத்திருக்க தமிழ் மக்களின் சிந்தனையை யாருக்காக திசை திருப்ப இவர்கள் முற்படுகின்றனர் என்பது தெரியவில்லை.

இருந்தும் இதைச் செய்பவர்கள் மிக மோசமாக மொக்கேனப்படுகின்றனர் என்பது மட்டும் தெரிந்த உண்மை.

LEAVE A REPLY