மைத்திரி வரலாற்றுத் துரோகி என்கிறார் மாவை

ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தான் எடுத்துக்கொண்ட கொள்கையையும் மீறியும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை மறந்தும் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களை ஏமாற்றித் தற்போது வரலாற்றுத் தவறொன்றை இழைத்துள்ளார்.”

– இவ்வாறு கடுமையாகச் சாடினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா.

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவையோ மஹிந்தவுக்கு எதிர்ப்பையோ கூட்டமைப்பு கொடுக்கவில்லை. மாறாக அரசமைப்புக்கு முரணான செயற்பாட்டை எதிர்த்து எங்கள் ஐனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையிலேயே தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்” என்றும் அவர் கூறினார்.

மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று ஊடகங்களைச் சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஒரு மோசமான ஆட்சி நடைபெறுவதால் அதனை மாற்ற வேண்டுமென்ற அடிப்படையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைக்கப்பட்டார். இவ்வாறு பொது வேட்பாளராக வந்தபோதும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வழங்கிய வாக்குறுதிகளையும் மறந்து அல்லது அதனை மறுதலிக்கின்ற வகையில் அவருடைய தற்போதைய செயற்பாடு அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாகக் கடந்த மாத இறுதியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிப் புதிய பிரதமராக மஹிந்த ராஐபக்‌ஷவை நியமித்திருக்கின்றார். ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடுகள் அரசமைப்பை மீறும் சட்டத்துக்கு முரணான செயற்பாடாகவே காணப்படுகின்றது. இது ஜனநாயக விரோதச் செயற்பாடு என்பதனாலேயே ஜனாதிபதியின் செயற்பாட்டை தற்போது பலரும் எதிர்த்து வருகின்றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர். ஆனால், எங்களது மக்களின் ஆதரவைப் பெற்ற மைத்திரிபால சிறிசேன இன்று மீளவும் மஹிந்தவை நியமித்திருப்பது தான் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நாம் பல்வேறு எதிர்பார்ப்புடன் ஆதரவு தெரிவித்து எமது மக்கள் வாக்களித்துக் கொண்டுவந்த மைத்திரிபால சிறிசேனவின் இத்தகைய செயற்பாடுகள் துக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதுவும் சட்டத்துக்கு முரணாக ஜனநாயக மரபுரிமையை மீறுகின்ற செயற்பாடுகளையே அவர் மேற்கொண்டிருக்கின்றார்.

ஆகவேதான் எங்களது ஐனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் நாம் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அந்தத் தீர்மானம் என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவானதோ அல்லது மஹிந்தவுக்கு எதிரானதோ அல்ல. நாங்கள் யாரையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. அரசமைப்பை மீறி ஜனாநாயகத்துக்கு விரோதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் செயற்பாட்டையே எதிர்க்கிறோம்” – என்றார்.