மைத்திரி-மஹிந்தவுக்கிடையே பெரும் மோதல் வெடிக்கும் அபாயம்? பஷில் வெளியிட்ட கருத்து!

மக்கள் விரும்பும் வேட்பளர் யாரோ அவர்தான் எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரருமான பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், கூட்டணி அமைப்பது தொடர்பில் தாம் யாரிடமும் எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என்று தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமையும் வாய்ப்பில்லை என்பதே உண்மையான வரலாறு என்று சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி வேட்பாளர் உரிய நேரத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்பதால் கோட்டாபய முன்வந்து தனது விருப்பை சொன்னது போல போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இதன்போது அவர் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முக்கியத்துவம்வாய்ந்தவை என்றும் இதன்போது குறிப்பிட்ட அவர், இதனை தாம் மனதார ஏற்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு என்பதனால் அதனை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும் என்றும் அதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பஷில் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர்க்கும் பொதுஜன பெரமுனவினர்க்குமிடையில் கடும் உட்பூசல்கள் நிலவிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எந்தவொரு சூழ்நிலையிலும் பொதுஜன வேட்பாளரல்லாத இன்னொருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்போவதில்லை என்று மஹிந்த தரப்பின் முக்கிய உறுப்பினர்கள் உறுதியாகக் கூறிவருகின்றனர்.

அதேபோல் சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது வேறொருவரோ அல்லாமல் வெளியிலிர்ந்து புதிய வேட்பாளரைக் களமிறக்கக்கூடாது என்பதில் மைத்திரி தரப்பின் முக்கிய புள்ளிகள் உறுதியாகவுள்ளனர்.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அதிரடியான சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.