மைத்திரி தெரிவுக் குழுவில் முன்னிலையாக மறுத்தால் இது தான் நடக்கும்! சுமந்திரன்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து தெரிவுக்குழுவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த குற்றச் சாட்டுக்களை தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென எண்ணுகிறேன்.

ஆகவே தெரிவுக் குழுவில் முன்னிலையாக ஜனாதிபதி தவறுவாராயின், அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததும் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஊயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஆழைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இருவரையும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அழைப்பை ஏற்று தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என வலியுறுத்தி கூறியுள்ளார்.