மைத்திரி- கோட்டா கொலை சதி: பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொலை சதி விவகாரம் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுகொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலியங்க, இன்று (சனிக்கிழமை) ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார வெளிப்படுத்தியுள்ள தகவல் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்காகவே பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாமல் குமாரவினால் வெளிப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மற்றும் கோட்டாபய தொடர்பிலான கருத்து இலங்கை அரசியலில் தொடர்ந்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.