மைத்திரியின் செயற்பாட்டில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன – ஆனந்த குமாரஸ்ரீ

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரஸ்ரீ தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாட்டில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மொனராகலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆனந்த குமாரஸ்ரீ, “ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஆராயப்பட்ட எமது தெரிவுக்குழுவின் அறிக்கையில், பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந்தத் தாக்குதல் இடம்பெற காரணமான பல விடயங்களை வெளிக்காட்டியிருந்தோம். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் ஏப்ரல் முதல் வாரமளவிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு புலனாய்வுத் தகவலின் எச்சரிக்கைக்கு இணங்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமானால், இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம்.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், பாதுகாப்புத்துறை பிரதானிகள், பாதுகாப்புச் செயலாளர் என அனைவரும்தான் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.

பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில்தான் நாம் இந்த விடயங்களை தெரியப்படுத்தினோம்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாட்டில் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன.

அதேபோல், முன்னாள் பிரதமர் சாட்சி வழங்கியபோது, பாதுகாப்பு கூட்டங்களின்போது தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் கூறிய அனைத்தையும் நாம் தெளிவாக எமது அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளோம்” என மேலும் தெரிவித்தார்.