மைத்திரிக்கு எதிராக வழக்குத் தொடரும் பூஜித

நியாயமான காரணங்களின்றி தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்ப சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்ய சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த மனுவை அவர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பூஜித ஜயசுந்தர, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை, காவல்துறை மா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில், தங்கியிருக்க முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை அவருக்காக உந்துருளி அணி பாதுகாப்பு உள்ளிட்ட சில காவல்துறை பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு பூஜித ஜயசுந்தரவை சிறிலங்கா அதிபர் கேட்டிருந்தார்.

எனினும், அவர் பதவி விலக மறுத்த நிலையில், சிறிலங்கா அதிபர் கட்டாய விடுமுறையில் அனுப்பி விட்டு, பதில் காவல்துறை மா அதிபராக சந்தன விக்ரமரத்னவை நியமித்துள்ளார்.