மேயர், நகராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்ய மசோதா சட்டசபையில் அமைச்சர் தாக்கல்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் மசோதாவையும், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு மசோதாவையும் சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநகராட்சி மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் ஆகியோரை மக்களே நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது தான் சிறந்த அமைப்பாகும். மறைமுக தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வார்டுகளுக்கான வளர்ச்சி பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். மேயர் மற்றும் தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பலத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்பதால் அவர்களால் சுயமாக எடுக்க முடியாத நிலை உள்ளது.

எனவே அவர்களை உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையில் இருந்து மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறைக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் நல்ல நிர்வாகத்தை கொண்டு வர முடியும். இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு செயல் வடிவம் கொடுக்க அரசு முடிவு செய்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை எதிர்க் கட்சிகள் அறிமுக நிலையிலே எதிர்த்தன.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் நடைமுறையே இருந்தது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்ததை தொடர்ந்து அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சட்ட மசோதாவில் திருத்தம் மேற்கொண்டார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் வெற்றி பெற்று, மறைமுக தேர்தல்கள் மூலம் மேயர், நகராட்சி, மாநகராட்சி தலைவர் பதவிகளை எளிதாக கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இந்த சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஜெயலலிதா கொண்டு வந்த இந்த சட்ட மசோதாவில் தற்போது மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனி அதிகாரிகளின் பதவிக்காலம் வருகிற ஜூன் 30-ந்தேதி நீட்டித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபையில் தமிழ்நாடு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் சட்டங்களை மீண்டும் திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை சென்னை ஐகோர்ட்டு 4-10-2016 அன்று ரத்து செய்து, புதிய தேர்தல் அறிவிக்கையை வெளியிடுமாறும் அத்தகைய தேர்தல் நடைமுறைகளை 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்குள் விரைவாக முடிக்க மாநில தேர்தல் ஆணையத்தை பணித்து இருந்தது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர்.

பின்னர் தேர்தல் அறிவிக்கையை 2017 செப்டம்பர் 18-ந் தேதிக்குள் உறுதியாக வெளியிட வேண்டும் என்றும், நவம்பர் 17-க்குள் தேர்தல் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி மன்றங்களின் வார்டுகளின் எல்லைகளை வரையறை செய்வதற்காக, கால அட்டவணைகளை வெளியிட்டு, அதன் மீதான பரிந்துரைகளை 2018-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதிக்கு முன்பு அரசுக்கு அனுப்பி, அதில் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்த சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரணங்களாலும், சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் உள்ளாட்சி தேர்தலை தற்போது வரை நடத்த இயலவில்லை. தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 2017 டிசம்பர் 31-ந் தேதி அன்று முடிவடைவதை கருத்தில் கொண்டு அவர்களின் பதவிக்காலத்தை 2018 ஜூன் 30-ந் தேதி வரை மேலும் 6 மாதங்களுக்கு அல்லது தேர்தலுக்கு பின் முதல் கூட்டம் நடக்கும் வரையில் நீட்டிக்க அரசை கேட்டுக்கொள்ளும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவுக்குவும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிமுக நிலையிலே எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY