மேஜர் ஜெனரலைக் காப்பாற்ற சட்டமா அதிபர் திணைக்களம் முனைப்பு

நாவற்குழியில், 1996ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் மூவர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள், நீண்ட காலதாமதம் ஆகி விட்டது என்று கூறி, அவற்றை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் கோரியுள்ளது.

இந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

நாவற்குழி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியாக இருந்தவரும், தற்போது சிறிலங்கா இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருப்பவருமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முதலாவது எதிரியாகவும், சிறிலங்கா இராணுவத் தளபதி இரண்டாம் எதிரியாகவும், சட்டமா அதிபர் மூன்றாம் எதிரியாகவும் இந்த ஆட்கொணர்வு மனுக்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முதலாம், இரண்டாம் எதிரிகள் தரப்பிலும், சட்டமா அதிபர் தரப்பே வழக்கில் முன்னிலையாகி வருகிறது.

நேற்று நடந்த விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரப்பில் முன்னிலையான, பிரதி சொலிசிற்றர் ஜெனரல், சைத்திய குணசேகர, ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக எட்டு எதிர்ப்புகளை சமர்ப்பித்தார்.

சம்பவங்கள் நிகழ்ந்து 22 ஆண்டுகளாகி விட்டன என்றும், நீண்ட தாமதம் ஆகி விட்டதால், வழக்கு ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

அத்துடன், மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நாவற்குழியில் தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், அவர் கூறினார்.

அத்துடன், 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக, சம்பவம் நடந்த காலப்பகுதியில் சாவகச்சேரி பிரதேச செயலராக இருந்த சுந்தரம்பிள்ளையினால் வழங்கப்பட்ட அத்தாட்சி கடிதம் போலியானது என்றும் அவர் வாதிட்டார்.

இவ்வாறு மொத்தம் 8 எதிர்ப்புகளை அவர் வெளியிட்டார்.

இந்த எதிர்ப்புகள் தொடர்பாக பிரதி சொலிசிற்றர் ஜெனரலின் வாதத்துக்காகவும், மனுதாரர்களின் தரப்பு சட்டவாளர்களின் பதில் வாதங்களை முன்வைப்பதற்காகவும், இந்த வழக்கை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும், ஜூலை 11ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

அதேவேளை,நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அதிகளவிலான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மனுதாரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், ஒளிப்படங்களையும் எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY