மெக்சிகோவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக பாதுகாப்பினை மேம்படுத்தக் கோரி ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

மெக்சிகோவில் 1968ஆம் ஆண்டு இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று 50 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், அதனை நினைவுகூரும் வகையிலுமே நேற்று (வியாழக்கிழமை) மெக்சிகோ சிட்டியிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இம்மாதத் தொடக்கத்தில் யூ.என்.ஏ.எம் பல்கலைக்கழகத்தினுள் ஆயுதம் கொண்ட குழுவொன்று நுழைந்து மேற்கொண்ட தாக்குதலில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு குவாரோரா மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் பொலிஸ் காவலிலிருந்த குற்றவாளிகள் கொண்ட குழுவொன்று மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 43 பேரைக் கொலை செய்துள்ளது.

இவ்வாறாக பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதக்குழுக்கள் நுழைந்து மேற்கொள்ளும் தாக்குதல்களில் மாணவர்களின் உயிர் இவ்வாறு காவுகொள்ளப்படுவதற்கு பல்கலைக்கழகங்களில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்மையே காரணம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.