மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை சுற்றிய சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்

மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையைச் சுற்றி சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா கோயில்குளம் சிவன் ஆலயம் முன்பாக இச்சாதனை துவிச்சக்கரவண்டி பயணத்தினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த துவிச்சக்கரவண்டிப் பயணம் 2125 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டமையவுள்ளதுடன், மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழத்தில் நிறைவுறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை சேர்ந்த கலைஞரான த.பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன் வடக்கு மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும், தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து குறித்த பயணத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர்களான சேனாதிராஜா, சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன் மற்றும் சிவன் கோவில் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.