மூத்த கட்சிகளுக்கு நேர்ந்த நிலை எமக்கு ஏற்படாது: பசில்

மூத்த கட்சிகள் போன்று இக்கட்டான நிலைக்கு பொதுஜன பெரமுன முகங்கொடுக்காது என, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இக்கட்டான தருணங்களை எதிர்கொள்வதை தவிர்த்துக் கொள்வதற்காக கட்சியின் சேமிப்பில் 21 மில்லியன் ரூபாய் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக தொழிற்பட்ட காலத்தில் கட்சி தலைமை அலுவலகமான சிறிகொத்தவின் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

அதேபோன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் நிதி குறைப்பாடு காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் மூடப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், இவ்வாறான நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும், கட்சி உறுப்பினர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களின் இப்பங்களிப்புக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் பசில் தெரிவித்தார்.