முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஒரே நேரத்தில் அரங்கேறியது எவ்வாறு? – வேலுகுமார் கேள்வி

குருணாகல், புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் வன்முறையாளர்கள் அணி திரண்டது எவ்வாறு? என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

எனவே இதன் பின்னணியிலும் பலம் பொருந்திய அரசியல் கரங்கள் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கண்டி – திகனை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “83ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின்போது தலைநகர் கொழும்பிலும் மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இனவாதிகளால் தமிழ் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட அச்சமும் பீதியும் இன்னும் தமிழர்களின் மனங்களைவிட்டு முழுமையாக அகலவில்லை. அந்த ஆறாவடுக்கள் ஆயுள் முழுதும் மாறாது என்றே கூறவேண்டும்.

இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி இரவும் அதன்பின்னரும் குருணாகல், புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. முஸ்லிம் மக்களின் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டன.

ஒரே தடவையில் வன்முறையாளர்கள் அணி திரண்டது எப்படி? ஒரே மாதிரியான பொல்லுகள் எங்கிருந்து வழங்கப்பட்டன? சட்டம், ஒழுங்கை கையிலெடுப்பதற்கு எப்படி துணிவு வந்தது? இவற்றை ஒப்பிட்டு, ஆராய்ந்து பார்த்தால் இதன் பின்னணியிலும் பலம் பொருந்திய அரசியல் கரங்கள் இருப்பதாகவே சந்தேகம் எழுகின்றது. எனவே, விசாரணை ஆணைக்குழு அல்லது நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இவை தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும்.

ஒரு சிலருக்காக ஒட்டுமொத்த சமூகத்தையுமே பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதாலேயே இனவாதம் தூண்டப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெறுகின்றன. சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் உடனடி நடவடிக்கைகளை எடுப்பதைவிட, இனியும் அவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயமாகும்.

முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகள், அடாவடிகள் இடம்பெற்றுதான் வருகின்றன. எனவே, தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நிலையானதொரு பொறிமுறை அவசியமாகும். நாம் இராணுவத் தீர்வை எதிர்ப்பார்க்கவில்லை. சிவில் நடவடிக்கைகள் ஊடாகவே பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் நாட்டிலும் வீட்டிலும் அமைதிப்பூக்கள் மலரும் என மேலும் தெரிவித்துள்ளார்.