முள்ளிவாய்க்கால் புனித பூமியை வைத்து அரசியல் செய்யாதீர்கள்- தவராசா

போலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன், முள்ளிவாய்க்கால் என்ற புனித பூமியை தங்களது சுய அரசியலுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் சென்று சில அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் போலித் தேசியம் பேசும் சில அரசியல் கட்சிகள் தாம் முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியப்பிரமாணம் செய்வதாகக்கூறி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் என்பது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளின் நினைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகள் ஒன்றுகூடி நினைவுகூரும் ஒரு புனிதமான பிரதேசமாகும். அவ்வாறான புனிதமான பிரதேசத்தில் தங்களது சுயநல அரசியலுக்காக அந்த முள்ளிவாய்க்காலை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக மக்களை முட்டாளாக்கி வரும் செயற்பாடாகவே இதை பார்க்கின்றேன்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது தற்போது போலித் தேசியம் பேசுபவர்கள் எங்கு இருந்தார்கள்? இவர்கள் மக்களுடன் மக்களாக இருக்கவில்லை. மாறாக தங்களது பணியிலும் வெளிநாடுகளிலும் இருந்துவிட்டு இப்போது முள்ளிவாய்க்காலில் வந்து தங்களது போலித் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்வதாகக் கூறும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள சத்தியப் பிரமாண நிகழ்வில் இலங்கை அரசியலமைப்பை பேணிப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுக்கவுள்ளனர்.

குறிப்பாக அரசியலமைப்பின் இரண்டாம் உறுப்புரையில் இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாப்போம் என்று அவர்கள் உறுதி உரை எடுக்க உள்ளனர். பின்னர் இங்கு மக்கள் மத்தியில் பொய்களைக் கூறி அவர்களை மறுபடியும் ஏமாற்றும் படலத்தை தொடர்ந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.