முள்ளிவாய்க்காலில் அழுவதற்குக் கூட அநாகரிக அரசியல் அடம்பிடிக்கிறது- வி.எஸ்.சிவகரன்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பது இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய திட்டமிட்ட மனித இனப்படுகொலை ஆகும். உறவுகளை இழந்தவர்களை நெருக்கடியின்றி இயல்பாக அழுவதற்கு வழிவகுக்க வேண்டியதே எமது தார்மீக கடமை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளாா்.

இன்று செவ்வாய்க்கிழமை(15-05-2018) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளாா்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது……….

மரண வீட்டு அரசியல் செய்வது மனித நாகரிகத்திற்கு உவப்பானது அல்ல இதை இரண்டு தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் தமிழ்த்தேசிய அடிப்படை வாதத்தில் இருந்து உருவெடுக்கா விட்டாலும் எமது மக்களின் இன்றைய அவலத்தை புரிந்து கொண்டு எவருக்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடி விடுதலை அரசியலுக்கு இறுமாப்புடன் வீரியமிடுகிறீர்கள்.

அதனால் தான் பெரும்பாலான தமிழ் மக்களினால் நேசிக்கப்படுகின்ற நம்பிக்கைக்குரிய ஒருவராக திகழ்கிறீர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தமிழ்த் தேசிய அரசியல் இன்று உங்களை சுற்றியே வட்டமிடுகின்றது. கூட்டமைப்பை கொழும்பு குத்தகைக்கு எடுத்து விட்டது.அவர்கள் சிங்கள தேச சிந்தனையுடன் கனவுலகில் வாழ்கிறார்கள்.

ஆகவே தமிழர்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டிய தார்மீக பெரும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை தாங்கள் புறந்தள்ள முடியாது.

இன அழிப்பு நினைவேந்தலை ஒருங்கிணைந்து செயலாற்ற முடியாமல் எதிரி சிரிக்குமளவிற்கு பலருடைய நிகழ்ச்சி நிரல்கள் வேலை செய்வதை தாங்கள் அறியாமல் இல்லை.

மாணவர்களுடைய கோரிக்கையும் முழுமையாக ஏற்புடையதன்று. அவர்களுக்குப் பின்னும் பல்வேறு விதமான சூழ்ச்சிகள் உண்டு என்பதுடன் சில அரசியல்வாதிகளும் வழிநடத்துகிறார்கள் என்பதும் வெளிப்படையானது.

ஆனால் மாகாண சபையிலும் பல்வேறு விதமான குறைபாடு உண்டு. அதற்கு உங்களை தனிய குற்றம் சொல்லமுடியாது.

தமிழரசுக்கட்சி உங்களை செயற்படவிடவில்லை. பல்வேறு விதமான நெருக்கடி தந்ததுடன் உங்கள் மாணவன் சுமந்திரன் மாகாணசபையில் உள்ள தனது அடிவருடிகளைக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி தங்களை மனோ நிலை ரீதியாக சங்கடப்படுத்துகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

அபிவிருத்தி வேலையை விட விடுதலை அரசியலுக்குரிய பணிகள் அதிகம் காணப்பட்டது.

அரசியல் மயப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையை அரசியல் நீக்கம் இன்றி முன்னெடுப்பது சிரமமாக காணப்படும்.

01.வடகிழக்கு ரீதியாக பொது அமைப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கி வலுவான செயற்பாட்டு அமைப்பை உருவாக்கி இருக்கலாம். அவ்வாறே உருவாக்கி இருந்தால் இந்த திடீர் தேசியவாதிகள் குழப்பம் உருவாகி இருக்காது.

02.நினைவுத்தூபி அமைப்பதற்கு ஒரு குழு அமைத்தீர்கள் ஆனால் இயங்கவில்லை.

03.முள்ளிவாய்காலில் இதுவரை காணி அடையாளமிட்டு வரையறுத்து ஒதுக்கீடு செய்யவில்லை.

04.இப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் உரிமை உண்டு என்கிறீர்கள் ஒரு மாகாணசபை உறுப்பினரிடம் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபா வழங்கியிருந்தால் இரண்டுகோடி ரூபாய் தேறி இருக்கும் தூபி அமைத்து இருக்கலாம்.

05.ஐந்து வருடத்தில் நீங்கள் எல்லோரும் அதிகம் செய்தது மாலைகளுடன் வலம் வந்ததும் எந்த தாக்கமும் செலுத்தாத பயனற்ற செயற்படுத்த முடியாத தீர்மானங்களை அடுக்கடுக்காக ஏட்டிக்கு போட்டியாக மாகாண சபையில் நிறைவேற்றியதும் ஆழும் கட்சிக்குள் எதிர்கட்சியாக செயற்பட்டதும்.

06.இன அழிப்பு என மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல் இனப்படுகொலைக்கு ஒரு தனியான விசாரணை ஆணைக்குழுவை நியமித்து உண்மையைக் கண்டறிந்திருக்கலாம் குறிப்பாக எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

காணமல் போனவர்கள் எத்தனை பேர், காணமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனைபேர், படைதரப்பிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எத்தனைபேர், அனாததைகள், அங்கவீனர்கள், விதவைகள், தபுதாரர்கள், இழந்த சொத்து மதிப்பீடு போன்றவற்றை சுயாதீனமாக உறுதிப்படுத்தி இருக்கலாம்.

அத்துடன் கிளிநொச்சி,முல்லை மாவட்ட அரச அதிபர்களின் புள்ளி விபரப்படி உலக உணவுத்திட்டத்தின் விபரப்படி 146,679 பேர் கொல்லப்பட்டோ, காணாமல் போயோ உள்ளனர் என்பதை ஆராய்ந்திருக்கலாம்.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு’ ‘பரணகம ஆணைக்குழு’ போன்றவற்றின் புள்ளிவிபரங்கள் தவறானவை என்பதை நிரூபித்திருக்கலாம்.

இந்தத் தகவல்களை சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்திற்கும் சமர்ப்பித்திருக்கலாம். செய்தீர்களா?

07.படைத்தரப்பாலும், அரசாங்கத்தாலும் அபகரிக்கப்பட்ட தனியார் அரச காணிகள் தொடர்பான விபரங்கள் ஒழுங்குமுறையாக சேகரித்திருக்கலாம்.

08.பௌத்த விகாரைகள் அத்து மீறிய சிங்கள குடியேற்றங்கள், படைத்தரப்பு முகாம்கள் போன்ற தகவல்களை சேகரித்திருக்கலாம்.

இவற்றை எல்லாம் விட்டுவிட்டு இறந்தவர்களின் கண்ணீரில் எல்லோரும் பங்குலாபம் தேடுகிறீர்கள்.

எட்டு ஆண்டுகளுக்கு பின்னர்தான் மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் ஞாபகம் வந்தது. இது மாணவர்களுடன் மட்டுப்படுத்தும் அளவிற்கு சாதாரண படுகொலை அல்ல அவர்களில் பெரும்பான்மையானவா்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என அறிகின்றோம்.

தயவு செய்து எல்லோரும் சேர்ந்து எம்மை குழப்பாதீர்கள். இழந்த உறவுகளைத்தவிர உங்கள் ஒருவருக்கும் இது சொந்தம் இல்லை. அபலச்சாவுக்கு உட்பட்ட ஆன்மாக்கள் உங்கள் ஒருவரையும் மன்னிக்காது.

ஆகவே மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுறப்போகிறது. மேலே குறிப்பிட்ட விடயங்களை இயலளவிலாவது நிறைவேற்ற முயலுங்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.

காற்று இடைவெளிகளை நிரப்பும் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ளுங்கள் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY