முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்

இலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான முன்னாள் சமாதான பேச்சாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எரிக்சொல்ஹெய்ம் என்கின்ற இந்த நபர் முன்னர் விடுதலைப்புலிகளுக்கு பாரியவருமானத்தை வழங்குபவராகவும், ஊட்டச்சத்தினை வழங்குபவராகவும் பராமரிப்பாளராகவும் விளங்கியவர் தற்போது இவர் ஒரு சூழல் செயற்பாட்டாளர் என ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்து டுவிட் செய்துள்ள சொல்ஹெய்ம், இந்த நபர் சமாதானத்தை ஊக்குவிப்பதற்கான பாடுபட்டவர், நாங்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட்டோம் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்தியாவுடனும் சமாதான முயற்சிகளை ஆதரித்த ஏனையவர்களுடனும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டோம் என்றும் நாங்கள் வெற்றியடைந்திருந்தால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.