முன்னாள் பிரதம நீதியரசரை உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரை முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துவெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்தோடு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18ம் திகதியும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவா வாடுகே சிறில் மற்றும் பேராசிரியர் பிரியந்த குணவர்தன ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு, இன்று விசாரிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அத்தோடு, சட்டமா அதிபரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்து, வழக்கை பெப்ரவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.