முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எடுத்த முடிவு!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பயன்படுத்தி வந்த S-600 மேர்சிடிஸ் பேன்ஸ் கார் உட்பட நான்கு உத்தியோகபூர்வ வாகனங்களை மீண்டும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, அரச செலவுகளை குறைக்கவும் நாட்டின் நிதி கஷ்டத்தை சமாளிப்பதற்காகவும் இந்த வாகனங்களை திரும்ப கையளிப்பதாக கூறியுள்ளார்.

அரசு தனக்கு 12 உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்கியிருந்ததாகவும் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ பயன்பாட்டுக்காக 9 வாகனங்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு மூன்று வாகனங்களும் வழங்கப்பட்டிருதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி திரும்ப கையளித்த வாகனங்களில் நிஸான் பெட்ரோல் ஜீப், மகேந்திர டபல் கெப், டொயோட்டா லேன்ட்குரூசர் ஜீப் என்பனவும் அடங்கும். எஞ்சியுள்ள 8 வாகனங்களையும் ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.