முன்னாள் சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கை

நாட்டில் அரசியலமைப்பு பிரச்சினை ஒன்று ஏற்படுவதை தவிர்க்க பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை கடிதம் மூலம் கோரியுள்ளமை ஜனநாயக வழியிலான சமயோசிதமான முடிவு என முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாம் எந்தவித தடுமாற்றமும் இன்றி அந்த கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஒரு சாராருக்கு மாத்திரம் சார்பாக பாராளுமன்றத்தை கூட்டி நாட்டில் அரசியலமைப்பு பிரச்சினை ஏற்பட தாம் ஒத்துழைக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

´நாட்டில் அரசியல் அமைப்பு பிரச்சினையொன்று ஏற்படாமல் தடுக்க பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு கூட்டினால் கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளிக்கின்றேன்.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை கடிதம் மூலம் கோரியுள்ளமை ஜனநாயக வழியிலான சமயோசிதமான முடிவாகும்.

அவ்வாறு கூட்டப்படுவதன் மூலம் எந்தவித உள்நோக்கத்தையும் நிறைவேற்றிக்கொள்ள எவருக்கும் முன்னாள் சபாநாயகர் என்ற வகையில் வாய்ப்பளிக்க போவதில்லை என இதற்கு முன்னர் கரு ஜயசூரிய தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

´எந்த வகையிலும் பாராளுமன்றத்தை மீள கூட்டுவதற்கான யோசனையாக அது அமையாது. தாய்நாட்டின் நலன் கருதியே தான் இந்த யோசனையை முன்வைக்கின்றேன்.

இதனை சிலர் ஒழுக்கமில்லாமல் விமர்சிக்கின்றனர்.

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தை கூட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு பிரச்சினையை மேலும் உக்கிரமடைய செய்யாது அரசியல் யாப்பு மற்றும் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செயற்பட கட்டுப்பட்டுள்ளேன். இதனை தேசிய பொறுப்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்´ என தெரிவித்திருந்தார்.