முடிவுக்கு வந்தது அரசியலமைப்பு பேரவை – மைத்திரி இழுபறி நிலை

மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்துள்ளதை அடுத்து, இந்தப் பதவிக்கான நியமனத்தில் காணப்பட்டு வந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்து வந்த நீதியரசரை அரசியலமைப்பு பேரவை நிராகரித்து வந்தது.

பல மாதங்களாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில், மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோதாகொடவின் பெயரை சிறிலங்கா அதிபர் முன்மொழிந்து அனுப்பியிருந்தார்.

அவரை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒருமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.

இதனால் இந்த நியமன விடயத்தில் சிறிலங்கா அதிபருக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையிலான அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் காணப்பட்ட இழுபறி முடிவுக்கு வந்துள்ளது