மீனவர் பிரச்சினை குறித்து இந்தியா- இலங்கை இடையே புதுடெல்லியில் நாளை பேச்சு!

எல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு நாளை இந்தியாவில் நடைபெறவுள்ளது. புதுடில்லியில் நடைபெறும் இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான அதிகாரிகள் குழு கலந்து கொள்கிறது. இந்திய தரப்பில் கமநல மற்றும் விவசாயிகள் நலன்புரி அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.

கடல்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இழுவை மடிவலைத் தொழிலை தடைசெய்ய வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இழுவை மடிவலைத் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலாக ஆள்கடல் மீன்பிடிக்கு மீனவர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.

அதேநேரம், அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் மீனவ பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லையென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம் தெரிவித்தார். வெளிநாட்டு படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருந்தபோதும் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்ததையில் இழுவை மடிவலைத்தொழிலை நிறுத்துவது என்ற விடயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY