மீண்டும் தலைதூக்கும் சந்தேகம்!

இந்த நாட்டில் சிறுபான்மை இன மக்கள் – குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்குமா என்பது குறித்த சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தில் உடனடி பிரச்சினைகளுக்கும், நிரந்தரத் தீர்வு காண வேண்டிய எரியும் பிரச்சினையாகிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக – சிறுபான்மை இன மக்கள் மத்தியில் நிலவியது.

எதேச்சதிகாரப் போக்கில் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தைப் பதவியில் இருந்து நீக்கி, ஜனநாயகத்தைக் காப்பதற்காகக் குரல் கொடுத்த ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன ஆகிய முத்தலைவர்களின் தலைமையிலான அணியினருக்கு நாட்டு மக்கள் ஆதரவளித்தார்கள். குறிப்பாக சிறுபான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள், தேர்தலில் அவர்களின் வெற்றிக்கு அடித்தளமாகியிருந்தன.

தங்களுடைய ஆதரவின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தினர் நிச்சயமாகத் தமது துயரங்களைத் துடைப்பார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள் என்று மிகுந்த ஆவலுடன் தமிழ் மக்கள் காத்திருந்தார்கள்.

ஆனால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றது. அவருடைய வேண்டுகோளை ஏற்று கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கே வாக்களித்தார்கள். அந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. ஆனால் தமிழ் மக்கள் இன்னும் தமது அன்றாடப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்குத் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு வழி சமைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டப்பட்டிருக்கின்றதே தவிர, அதற்கான உறுதியான சமிக்ஞைகளை அவர்களால் இன்னும் காண முடியவில்லை.

அரசியல் தீர்வு என்பது அதிகாரப் பகிர்வை அடிநாதமாகக் கொண்டிருக்கின்றது. அது ஒற்றையாட்சியின் கீழ் சாத்தியமா என்ற பலத்த விவாதப் பொருளாகியிருக்கின்றது. சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை ஒரு புறமும், சமஸ்டி ஆட்சி முறைக்கு எதிரான நிலைப்பாடு மறு புறமுமாக அரசியல் தீர்வு ஊசலாடிக்கொண்டிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. ஆயினும் அது சமஸ்டிக்கான கோரிக்கையும் அதன் மறுப்பு நிலைப்பாட்டுக்கும் இடையில் எத்தகைய சமரசத்தின் கீழ் சாத்தியமாகும் என்பது தெளிவற்றிருக்கின்றது. சம்பந்தப்பட்டவர்களினால் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கின்றது.

எதிரும் புதிருமான நிலைப்பாடு

புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வுக்கான அடிப்படைக் கோட்பாடுகள் என்ன கொள்கைகள் என்ன என்பவற்றில் எதிரும் புதிருமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரச தரப்பினருக்கும், அரசுக்கு ஆதரவு வழங்கி சமரச அரசியல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு பூர்வாங்க இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றதா என்பது கூடத் தெரியவில்லை.

ஆங்கிலேயரிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் – கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாமல் நாட்டின் இனப்பிரச்சினை புரையோடிப் போயுள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உச்ச நிலைமை வரையிலான சாத்வீகப் போராட்டங்களை மூத்த தமிழ் தலைவர்கள் முன்னெடுத்து அதில் களைத்துத் தோற்றுப் போய்விட்டார்கள்.

அரசியல் ரீதியான இந்தக் களைப்பையும் தோல்வியையுமே, தமிழ் மக்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற கூற்றின் மூலம் தந்தை செல்வநாயகம் கூறிச் சென்றுள்ளார்.

அவருக்குப் பின்னால் தலைமைப் பொறுப்பை ஏற்ற தமிழ் அரசியல் தலைவர்களும் சாத்வீக்ப் போராட்டத்தில் முன்னேற்றத்தைக் காண முடியவில்லை.

அதற்கு அடுத்த கட்டமாகத் தமிழ் இளைஞர்கள் வெகுண்டெழுந்து ஆயுதவழியில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்திழருந்தார்கள். அந்தப் போராட்டமும் பல இடங்களில் தடம் புரண்டபோதிலும், தனிநாட்டுக்கான உறுதியான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு பின்னர் ஆயுத ரீதியாக அரச படைகளினால் அழிக்கப்பட்டிருக்கின்றது.

இத்தகைய பின்னணியில்தான் மீண்டும் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மூத்த தமிழ் அரசியல் தலைவர்களின் சாத்வீகப் போராட்டங்களின்போதும், இளையவர்களின் ஆயுதப் போhட்டத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்களும் பொதுமக்களும் பல்வேறு இழப்புக்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. அவமானங்கள், அறநெறிகளை மீறிய அநியாயங்கள், உளவியல் ரீதியான பாதிப்புக்கள் என பல்வேறு படிமுறை நிலைகளில் பாதிக்கப்பட்டு ஊழிக்காலத்தின் எல்லைக்கே சென்று மீண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கு, புதிதாக உருவாக்கப்படவுள்ள ஓர் அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காணப்படுமா, அல்லது அரசியல் தீர்வு காண்பது சாத்தியமா என்பது தர்க்க ரீதியாகக் கேள்விக்குறியதாகும்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றுக்கான பொறுப்பு கூறுவதற்கான முயற்சிகளுடன், நல்லிணக்க முயற்சிகள் ஒரு புறமும், புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மறுபுறமும் என பிச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் மீள்குடியேற்றம் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கின்றது. பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் வெளியேற்றம் தொடர்ந்து நடக்குமா என்பது கேள்விக்குறியாகியிருக்கின்றது.

காணாமல் போனவர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அலுவலகம் அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையுமா என்பதும் சந்தேகத்திற்குரியதாகியிருக்கின்றது.

இராணுவத்தினரிடம் பலர் சரணடைந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு அரச தரப்பில் எவரும் பேச்சளவில்கூட தயாராக இல்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அபரிமிதமான அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆட்களைக் கைது செய்த அரசாங்கம் இன்று அரசியல் கைதிகளாக விசாரணைகளின்றியும் விடுதலையின்றியும் வாடுபவர்களை மனிதாபிமான முறையில் நோக்கிச் செயற்படுவதற்கோ, அல்லது அவர்களை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதற்கோ தயாராக இல்லை. இத்தகைய ஒரு நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதம் அரசியல் உறுதிமொழி கானல் நீராகவே பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் தெரிகின்றது.

ஒற்றையாட்சியை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி

எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். சமஸ்டி முறையில் ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும். பொதுமக்களின் காணிகளில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும். பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் பௌத்தமயமாக்கும் வகையில் ஆக்கிரமிப்பு ரீதியாக அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அகற்ற வேண்டும் எழுக தமிழ் பேரணியின் மூலம் குரல் கொடுத்தவர்களும், அந்த நிகழ்வுக்குத் தலைமைதாங்கிய வடமாகாண முதலமைச்சரும் இன்று இனவாதிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கச் சூழ்நிலையை இல்லாதொழிப்பதற்காக இனவாதத்தைக் கையிலெடுத்துச் செயற்பட்டதன் அடையாளமாகவே எழுக தமிழ் நிகழ்வை தென்னிலங்கை அரசியல்வாதிகளும், பௌத்த மத கடும்போக்காளர்களும் திரித்துக்காட்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதப் போக்கு ஒன்றை அவர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். அதற்கான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வடமாகாண முதலமைச்சரை அப்பட்டமான இனவாதியாகச் சுட்டிக்காட்டி, பகிரங்கமாக அவரைக் கண்டித்து வவுனியா நகர வீதிகளில் சிங்கள மக்களைத் திரட்டி பேரணி நடத்தியிருக்கின்றார்.

உரிமைக்காக யாழ்ப்பாணத்தில் குரல் கொடுத்தவர்களைக் கண்டித்து, கொழும்பில் இருந்து வந்து வவுனியாவில் கண்டனப் பேரணி நடத்தியமை உச்சகட்ட இனவாதமாகும் என்று வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வர்ணித்திருக்கின்றார்.

காவி உடையில் கடும்போக்கைக் கடைப்பிடித்து வருகின்ற ஞானசார தேரர் இலங்கையின் மிகவும் மத தீவிரவாதியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளபோதிலும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உரிமைக்குரலுக்கான பேரணியைக் கண்டித்து வவுனியாவில் வந்து கண்டனப் பேரணி நடத்திய அவருடைய செயற்பாடு மிக மிக பாரதூரமானது.

நல்லிணக்கம் பற்றியும், நல்லிணக்கத்தின் அவசியம் பற்றியும் வலியுறுத்தி வருகின்ற அரசாங்கம் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக குரோதமான முறையில் இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தனது அமைச்சர்களையோ ஏனைய அரசியல்வாதிகளையோ கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. நல்லிணக்கத்தின் மீது அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு இதயசுத்தியானதுதானா என்ற கேள்வியையும் ஐயப்பாட்டையும் எழுப்பியிருக்கின்றது.

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொதுபலசேனாவின் ஏற்பாட்டில் வவுனியாவில் அதன் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் வடமாகாண முதலமைச்சரை இனவாதியாகச் சித்தரித்து அவரைக் கண்டித்து இனவாத விஷத்தைக் கக்கி கண்டனப் பேரணியொன்றை நடத்தியிருந்தார்.

இந்தப் பேரணி நடைபெற்று முடிந்த இரண்டாவது நாளாகிய ஞாயிறன்று யாழ்ப்பாணத்தில் நாட்டின் 42 ஆவது தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டில் நல்லிணக்கத்தின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கிளப்பிவிடப்பட்டுள்ள இனவாதப் போக்கைக் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

இந்த நிகழ்வில் அவருக்கு முன்னதாக உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் தென்பகுதி அரசியல்வாதிகள் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு தனது உரைக்குத் தப்பான அர்த்தத்தைத் தோற்றுவித்து, தன்னை ஒரு பேயாக, பூதமாகச் சித்தரித்திருக்கின்றார்கள் என கவலை வெளியிட்டிருந்தார்.

வடமாகாணத் தலைநகராகிய யாழ்ப்பாணத்தில் இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக இடம்பெற்ற இந்தத் தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாணத்தின் முதலமைச்சர் தனக்கு இனவாத அரசியலின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மனக்கவலையை வெளியிட்டபோது, இனவாதம் எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், அது, நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும் என்ற தோரணையில் எந்தவித கருத்தையும் ஜனாதிபதி தனது உரையில் வெளியிடவில்லை.

ஜனாதிபதி கூறியது என்ன?

மாறாக, இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சமஸ்டி அலகைக் கொண்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்ற தமிழர் தரப்பு அரசியல் உரிமை கோரிக்கையை மறைமுகமாக – அதேவேளை உறுதியான முறையில் மறுத்துரைத்ததையே காண முடிந்தது.

விளையாட்டில் பங்குபற்ற வேண்டும் வெற்றிபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் எந்தவிதமான பேதமுமின்றி யாழ் நகரின் புகழ்பூத்த துரையப்பா விளையாட்டரங்கத்தில் ஒன்று கூடியிருப்பதைப் போன்று 9 மாகாணங்களையும் சேர்ந்தவர்கள். நிர்வாகத்திற்காகவும், அபிவிருத்தி உள்ளிட்ட நற்காரியங்களுக்காகவும் மட்டுமே பிரிந்திருக்க வேண்டும். அந்த மாகாணங்களுக்கு உரிமை கோரி சண்டை பிடிப்பது அழகல்ல. அது தேவையற்றது என்பதை சூசகமாகத் தனது உரையில் உணர்த்தியிருந்தார்.

இந்த நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே தமது நிர்வாகச் செயற்பாட்டிற்கு வசதியாக இலங்கையை முதலில் 5 பிரிவுகளாகவும் பின்னர் அதனை 9 மாகாணங்களாகவும் பிரிந்திருந்தார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஆங்கிலேயர்கள் தந்துவிட்டுப் போன மாகாணங்களுக்காக நாங்கள் இப்போது ஏன் சண்டை பிடிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்வதற்கு முன்னர் இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் அல்லது அரசன் ஒருவனின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டிருந்ததைப் போன்ற கருத்து மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆங்கியேர்களினால் உருவாக்கப்பட்ட மாகாணங்களுக்காக நாங்கள் ஏன் சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கேள்வி அமைந்திருந்தது.

இலங்கை ஒன்பது மாகாணங்களாக நிர்வாகச் செயற்பாடுகளுக்காகப் பிரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் ஒரே நாட்டினராக ஒற்றையாட்சியின் கீழ் செயற்பட வேண்டும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்குமாறு கேட்பதோ அல்லது சமஸ்டி முறையிலான ஒரு தீர்வைக் கேட்பதோ அவசியமற்றது. அது சாத்தியமாகாது என்பதையும் மறைமுகமாக எடுத்துரைக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் உரையாற்றியிருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தன், நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் ஐக்கியமாகவும் இறைமையுடனும், சுதந்திரத்துடனும் வாழத்தக்க வகையில் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

கேள்வி……..

ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தீர்வு குறித்து உரையாற்றுகையில் அல்லது கருத்துக்களை வெளியிடுகையில் வழமையாகத் தெரிவிக்கின்ற வடக்குகிழக்கு இணைந்த பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்ற கருத்தை நாட்டின் ஜனாதிபதியின் முன்னால் இங்கு வெளியிடவில்லை.

இது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்தி ஓர் உடனபாட்டிற்கு இரு தரப்பினரும் வந்துவிட்டதன் காரணமாக இருக்கலாமோ என்ற கேள்விiயை எழுப்பியிருக்கின்றது.

அது மட்டுமல்ல. சமஸ்டி முறைக்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் உடன்படமாட்டார்கள்தானே, அதனால் அவருக்கு முன்னால் அதனை எடுத்துக் கூறுவதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது என்ற காரணத்திற்காக சம்பந்தன் சமஸ்டி பற்றி பேசாமல் விட்டுவிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுகின்ற ஜனாதிபதிக்கும்சரி, முக்கிய அரசியல் தவைர்கள், இராஜதந்திரிகளுக்கும்சரி, தமிழ் மக்களுடைய அபிலாசைகள், அரசியல் எதிர்பார்ப்புக்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டியது அவசியம். இது அரசியல் விழாக்கள் அரசியல் வைபவங்களில் கடைப்பிடிக்கின்ற ஓர் உத்தியாகவும் பின்பற்றப்பட்டு வருகின்றது.

அரசியல் தலைவரையோ, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முக்கிய அரசியல்வாதியைத் தங்களுடைய பிரதேசத்தில் வரவேற்கின்ற மக்கள் தங்களுடைய தேவைகள், பிரச்சினைகளை எடுத்துக்கூறி அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கைகள் விடுவதை சாதாரணமாக காண முடியும்.

ஆகவே, அரசியல் தீர்வு சம்பந்தமாக சமஸ்டி முறையைத்தான் நாங்கள் கோருகின்றோம் என்று மக்கள் மத்தியில் கூறி வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இது குறித்து அரசாங்கத் தரப்புடன் தனிப்பட்ட முறையிலோ அல்லது அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கான பேச்சுக்களின்போதோ எடுத்துரைத்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை.

அத்தகைய ஒரு பேச்சுவார்த்தை இந்த அரசாங்கத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடத்தியிருக்கின்றதா, அதற்கு அரசாங்கம் அளித்த பதில் என்ன என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியானதாகவும் தெரியவில்லை.

இதன் காரணமாகத்தான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கலந்து கொண்ட ஒரு வைபவத்தில் உரையாற்றிய சம்பந்தன் தமிழ் மக்களின் நிலைப்பாடு குறித்து, தெளிவான கருத்துரைக்கவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

அரசியல் தீர்வு தொடர்பிலான தனது நிலைப்பாடு குறித்து அரசாங்கம் ஓர் இடைக்கால அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆகவே, காலம் கடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் நிலைப்பாடு அரசாங்கத்தினால் உண்மையில் எந்த வகையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றோ, அல்லது அரசியல் தீர்வில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் சரியான முறையில் அரசியல் தீர்வில் அரசாங்கத்தினால் உள்ளடக்கப்படும் என்றோ எந்த வகையிலும் ஊகம் செய்யவோ அல்லது அறிந்து கொள்ளவோ முடியாத ஒரு தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது.

செல்வரட்னம்: சிறிதரன்

LEAVE A REPLY