மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மீண்டும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகரும் அரசியலமைப்பு சபை தலைவருமான கரு ஜெயசூரிய தலைமையில் நேற்றுக் கூடிய அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பு சபையில் இருந்து சமல் ராஜபக்ச விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இரா.சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நேரடியாக தெரிவாகியிருந்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, இரா.சம்பந்தன் அரசியலமைப்பு சபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டது.

இந்த நிலையிலேயே அவர் மீண்டும், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், அரசியலமைப்பு சபைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.