மியான்மரில் ஆங்சான் சூகி கூட்டணி பதவி ஏற்பு

201602020052377175_Aung-San-Suu-Kyi-in-Myanmar-inaugural-Alliance_SECVPF.gifமியான்மரில் ஆங்சான் சூகி தலைமையிலான கூட்டணி நேற்று பதவி ஏற்றுக் கொண்டது.

சூகி கூட்டணி வெற்றி

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக உரிமை கோரி போராடி வந்தவரும், நோபல் பரிசு பெற்ற பெண்மணியுமான ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மியான்மரில் 1962-ம் ஆண்டுக்கு பின்பு ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும்.

மியான்மர் நாட்டு சட்டத்தின்படி வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் ஜனாதிபதி (ஆட்சித் தலைவர்) பொறுப்பை ஏற்க முடியாது. ஆங்சான் சூகி வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் என்பதால் அவரால் ஜனாதிபதி ஆக முடியவில்லை.

பதவி ஏற்பு

தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி விட்டாலும் 3 மாதங்களுக்கு பிறகே, அதாவது 2016-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி அன்றுதான் பதவி ஏற்க முடியும் என்று நிலை இருந்தது.

இதைத்தொடர்ந்து ஆங்சான் சூகி தலைமையிலான கூட்டணி நேற்று ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது. புதிய அரசு பதவி ஏற்றது குறித்து எம்.பி. பியான் சோ கூறுகையில் ‘‘பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்’’ என்றார்.

ஜனாதிபதி தேர்தல்

மியான்மரில் புதிய ஜனாதிபதி தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இதன் பிறகே புதிய அரசாங்கம் முறைப் படி இயங்கத் தொடங்கும்.

மியான்மரில் ராணுவ அரசு வகுத்த சட்டத்தின்படி பாராளுமன்ற மேல் சபை, கீழ்சபை இரண்டிலும் 4-ல் ஒரு பங்கு எம்.பி.க்களை ராணுவத்தால் நிரப்பிக் கொள்ள முடியும். இதனால் புதிய பாராளுமன்றத்தில் ராணுவ அதிகாரிகளும் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலை உள்ளது.

ஆனால் இரு சபைகளிலும் ஆங்சான் சூகியின் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதால் அந்த கூட்டணியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கட்டுப்படுத்த முடியும்

இதற்கிடையே, ‘ஆட்சி பொறுப்பை ஏற்க முடியாவிட்டாலும் கூட புதிய அரசாங்கத்தை தன்னால் முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். ஜனாதிபதிக்கு மேலாகவும் தன்னால் செயல்பட முடியும்’ என்று ஆங்சான் சூகி கூறி இருக்கிறார்.

LEAVE A REPLY