மாவீரர்களின் எண்ணங்களைச் சுமந்து ஒன்றாகப் பயணிக்க வேண்டும்- கோடீஸ்வரன்

மாவீரர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுமந்தவர்களாக நாங்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவு காவலரங்கில் வைத்து கொல்லப்பட்ட கணேஷ் தினேஷின் ஒருவருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடத்தப்படும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

அவர் கூறகையில், “இஸ்லாமிய தீவிரவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷ் போன்ற இளைஞர்களின் உயிர்களைப் காவுகொடுப்பதற்குக் காரணமாக இருந்துள்ளது.

இந்தவகையில் நாங்கள் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும். தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழ் தேசியத்தைப் பாதுகாக்கவேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதில் பல சக்திகள் பின்நின்று செயற்படுகின்றன. இவற்றுக்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும்.

பேரினவாத சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவேண்டிய ஒரு தேர்தல் களமாக இத்தேர்தல் அமைந்திருக்கின்றது. இந்தத் தேர்தல் காலம் என்பது அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்கின்ற ஒரு தேர்தலாக இருக்கின்றது.

இதில் எமது வாக்குரிமையை சிறப்பாகப் பயன்படுத்தி தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதன்மூலமே எமது இருப்பை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் நாங்கள் எங்களது தலையிலே மண்ணை அள்ளிப்போட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

கிழக்குத் தமிழ் தலைமை என்ற பிரதேசவாத கருத்துகளைக் கூறி பலர் களமிறங்கி இருக்கின்றனர். வடகிழக்கு என்பது எமது தாயகம். எமது கனவு. எமது சின்னம் என்பது எங்களது குறிக்கோளாக இருக்கின்றது.

போராட்ட வரலாறுகள் கூட வடகிழக்கு இணைப்பின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. எமது விடுதலைப் போராட்டம் அவ்வாறே நடைபெற்றிருந்தது. அதனடிப்படையில்தான் இந்த மண்ணிற்கு அதிக அளவிலான மாவீரர்கள் வித்தானார்கள்.

எனவே, மாவீரர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுமந்தவர்களாக நாங்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.