மாலத்தீவில் அரசியல் நெருக்கடி: அவசர நிலையை திரும்ப பெற ஐ.நா. வலியுறுத்தல்

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக செயல்பட்ட ஆளுங்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து அதிபரின் பதவி பறிபோகும் சூழல் உருவானது. இதனால் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த அதிபர் அப்துல்லா, 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்தார். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

அரசுக்கு எதிராக செயல்படுவோர் மட்டுமின்றி சந்தேகப்படும் நபர்களை கைது செய்யும் முழு அதிகாரமும் பாதுகாப்பு படைகளிடம் வந்தது. முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெருக்கடி நிலையைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்காக மிளகு பொடி அடைக்கப்பட்ட குண்டுகளை வீசி கலைத்து வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் மாலத்தீவில் மோசமான நிலை உருவாகி இருக்கிறது. அதிபரின் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.

மாலத்தீவில் அமைதி ஏற்படுத்த ஐ.நா. சபை, அமெரிக்கா ஆகியவையும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்தியாவும் அங்கு அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மாலத்தீவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு ஐ.நா. தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

‘மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதை அரசு விரைவில் திரும்ப பெற வேண்டும். மேலும் மக்கள் மற்றும் நீதித்துறை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார். #Maldives #tamilnews

LEAVE A REPLY