மாணவர்களை விடுவிக்க கோரி ஜனாதிபதியை சந்திப்பதற்கு புறப்பட்டது குழு ஒன்று!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் செயலாளர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இன்று கொழும்புக்கு சென்றுள்ளனர்.

கடந்த-03 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் விடுதிகளில் நடாத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் கோப்பாய்ப் பொலிஸாரால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இரு மாணவர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரு மாணவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரியவருகிறது.