மாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் – நஸீர் அஹமட்

மாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கும் அபிவிருத்திக்கும் வழி வகுக்கும் என தான் உறுதியாக நம்புவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இன்று (வியாழக்கிழமை)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகள் வலுவூட்டப்படுவது மாத்திரமின்றி மாகாண சபை தேர்தல்களும் அவசரமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாகாண சபை செயலிழந்ததினால் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நிருவாகத்தைக் கொண்டு செல்வதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியப் போக்குகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.

குறிப்பாகச் சொல்லப்போனால் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாகாண சபை நிர்வாகம் இல்லாததால் அதிகாரிகள், மக்களை அலட்சியப்படுத்துகின்றனர். பொடுபோக்குத்தனமாக செயற்படுகின்றனர். மக்களின் தேவைகளை இனங்கண்டு செய்வதற்கு பின்னடிக்கின்றனர் என்றார்.

அவை மாத்திரமின்றி மாகாண சபை இயங்காத காரணத்தினால் பல அரச துறைகளில் ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது.

உதாரணமாக, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நீண்டகாலமாக மூடப்பட்டே இருக்கின்றது. முன்னர் இந்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 19 பேர் கடமையாற்றினர். தற்போது 11 பேரை மாத்திரமே கொண்டு வைத்தியசாலை இயங்குவதால் நோயாளர்கள் பெரிதும் தவிக்கின்றனர்.

உரிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

எனவே, இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாகாண சபையின் இயக்கம் இன்றியமையாதது. அதனால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி மாகாண நிருவாகத்தை சீரமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.