மாகாண சபையையும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் ரத்து செய்ய வேண்டும் – அரசாங்கத்திடம் கோரிக்கை

மாகாண சபை முறையையும் தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் நீக்குமாறும் தேசிய கூட்டு அமைப்பு அரசாங்கத்தின் கோரிக்கை விடுத்துள்ளது.

பல திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏராளமான ஏற்பாடுகளை நீக்குவதற்கான உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய குறித்த அமைப்பு, ‘மாகாண சபைகள் ஒழிக்கப்படாது’ என்று நீதி அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்து குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் இணைத்தலைவர்களான ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேர்னல் அனில் அமரசேகர மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரி கே.எம்.பி. கொட்டகதெனிய, “மூன்று ஆண்டுகளாக இந்த மாகாண சபைகள் இல்லாமல் இருக்கிறோம். மாகாண சபைகள் இந்த நாட்டால் வாங்க முடியாத வெள்ளை யானைகள் போன்ற ஒன்றாகும்.

13 ஆவது திருத்தம் மாகாணங்களை ஒன்றிணைப்பதன் மூலம் இனக்குழுக்களை உருவாக்குவதற்கு வழங்குகிறது” என தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் அரசாங்கதிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளமையினால் மாகாணசபை முறையை ரத்துச் செய்ய முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நீக்கிவிட்டு, 1978 க்கு முன்னர் இருந்ததைப் போன்ற தேர்தல் முறைக்கு திரும்ப வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்பாடாக நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பை உடனடியாக மறுசீரமைக்க இந்த அரசாங்கத்தின் அனைத்து வளங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும் இதுவே இந்த அரசாங்கத்தை பதவிக்கு அமர்த்த வாக்களித்த அனைத்து மக்களின் விருப்பம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்கூறிய திருத்தங்களால் ஏற்பட்ட வரலாற்று அநீதிகள் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ளதாகவும், எனவே ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால் புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டைத் தயாரிப்பதில் அரசாங்கத்திற்கு உதவக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தேசிய கூட்டு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.