மாகாணசபைத் தேர்தலையும் பலவந்தமாக பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது: மஹிந்த

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பலவந்தமாகப் பெற்றுக்கொண்டதைப்போல, மாகாணசபைத் தேர்தலையும் அரசாங்கத்திடமிருந்து பலவந்தமாகப் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொலன்னறுவையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரவேண்டியக் கட்டாயத்தில்தான் அரசாங்கம் இருக்கிறது.

இதுதொடர்பில், நாம் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்துள்ளோம். எனவே, நீதிமன்றின் தீர்ப்பும் இவ்விடயத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

நாம் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். தேர்தல்கள் ஆணையாளர், அமைச்சர் என அனைவரையும் இவ்விடயம் தொடர்பில் நாம் சென்று சந்தித்து கலந்துரையாடினோம்.

ஆனால், இன்னும் இந்தத் தேர்தலை அரசாங்கம் நடத்த முற்படவில்லை. தேர்தலுக்கான அச்சத்தினாலேயே அரசாங்கம் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்கிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பெற்றுக்கொண்டதுபோல பலவந்தமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

அத்தோடு, கூட்டணி அமைப்பது தொடர்பில் நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்ந்தும் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எவ்வாறாயினும், இறுதித் தீர்மானமொன்றுக்கு எமது இரு தரப்பும் வரவில்லை. அனைத்து செய்றபாடுகளையும் மேற்கொண்டு இறுதியில் ராஜபக்ஷக்களை விமர்சிப்பதைத் தான் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

காய்க்கும் மரத்திற்குத் தான் கல்லடிக் கிடைக்கும். அதான், எமக்கு இவ்வளவுப் பிரச்சினைகள் வருகின்றன” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.