மஹிந்த தமிழ் மக்களுக்கு எதிரானவர் – அஜித் பி பெரேரா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது தரப்பினர் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகள் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுவது தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அவரது தரப்பினருக்கும் முதலில் தெளிவுப்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பு விடயத்தில் இனவாதத்தை பரப்பி மக்கள் மத்தியில் பிழையான பிரச்சாரங்களையே மேற்கொள்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினர் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள்.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு கிடைப்பதற்கு இவர்களே ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். இன்று அவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர்.

பெரும்பான்மை இனத்திலும் சில அடிப்படைவாதிகள் காணப்படுகின்றனர். அடிப்படைவாதிகளின் ஆதரவு மாத்திரம் கிடைக்கப் பெற்றால் போதும் என்று கருதியே இன்று மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பிற்கு எதிராக அவரது தரப்பினரை தூண்டி விடுகின்றார்“ என தெரிவித்துள்ளார்.