மன்னார் மனிதப் புதை குழியில் மீட்கப்பட்டதில் 17 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது

மன்னார் “சதொச” மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியில் நடத்தப்பட்டுள்ள அகழ்வின்போது இது வரையில் 148 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அகழ்வராய்ச்சிக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

குறித்த அகழ்வு பணிகளின் தற்போதைய நிலை குறித்து வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகழ்வு மேற்கொள்ளப்பட்ட முனைகளில் இன்னும் எலும்புக்கூடுகள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இன்னும் ஒரு மாதம் அளவிலான காலப்பகுதியில் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ளப்படும் .

12 மீற்றர் நீளமும் 7 மீற்றர் அகலமும் கொண்ட புதைகுழியில் மேற்கொண்டு வருகின்ற அகழ்வில் இது வரையில் 17 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக கடந்த வாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வுப் பணிகள் ஒக்டோபர் முதலாம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தானும் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷவும் சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்ததனால், ஏழு நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்ததாக பேராசிரியர் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இந்த மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நிதியுதவி தேவைப்படுவதாகவும், இது குறித்து தாங்கள் சுகாதார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளுக்கான நிதியுதவி வழங்கப்படும் என்று காணாமல் போனோருக்கான அலுவலகத்தினர் தெரிவித்துள்ள போதிலும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலைமை குறித்து இது வரையில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினருக்குத் தெரிவிக்கப்படவில்லை.