மனித எச்சங்களின் பரிசோதனை முடிவில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன – சுமந்திரன்

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் பரிசோதனை முடிவுகள் தமிழர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் காபன் பரிசோதனை மூலம் காலத்தை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கின்றன.

காபன் பரிசோதனை மூலம் அவை எந்தக் காலத்துக்கு உரியவை என்பதை நாம் உறுதிப்படுத்த முடியும். இதன் முடிவுகள் வெளியிடப்படுகின்றபோது அது, தமிழ்த் தரப்புகளுக்கும் சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும்.

இதற்குக் காரணமாக இலங்கை இராணுவமாக இருந்தாலும், தமிழ்த் தரப்பிலே ஏதேனும் ஓர் ஆயுதக்குழு இதற்குக் காரணமாக இருந்தாலும் அவர்களும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையேற்படும்.

இந்திய அமைதி காக்கும் படை அந்த இடத்திலே இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. எனவே இது குறித்தும் நாங்கள் அவதானிக்க வேண்டும்.

எந்தக் காலத்தில் இது நடந்தது என்பது உறுதியாகும்போது சில உண்மைகள் வெளியாகும். காலம் அறியப்படும்போது பல அதிர்ச்சிகள் எமக்கும் காத்திருக்கின்றன“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.